சென்னை:
சென்னையில் தங்களது வளாகத்திலேயே குப்பைகளைத் தரம் பிரித்து மேலாண்மை செய்ய வேண்டும் என்ற விதியை மீறியதற்காக, கடந்த 40 நாட்களில் 120 வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ.6.60 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி விதிகளின்படி, நாள்தோறும் 100 கிலோவுக்கும் அதிகமாக கழிவுகளை உருவாக்கும் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் மற்றும் ஐடி பூங்காக்கள் போன்றவை அதிக அளவில் குப்பை உருவாக்குபவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் அனைத்தும் தங்களது வளாகத்திலேயே குப்பையை மக்கும் மற்றும் மக்காத குப்பை என முறையாகத் தரம் பிரித்து, மறுசுழற்சி மற்றும் மேலாண்மை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ள 3,204 நிறுவனங்களில் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 40 நாட்களாகத் தீவிர தணிக்கை மேற்கொண்டனர். இந்த ஆய்வில், விதிகளைப் பின்பற்றாமல் அலட்சியம் காட்டிய 120 வணிக அமைப்புகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ₹.6.60 லட்சம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.
மேலும், குப்பை மேலாண்மை விதிகளைத் தொடர்ந்து மதிக்காமல் மீறும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நிறுவனங்களின் வணிக உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்யவும், அவற்றின் குடிநீர் மற்றும் மின் இணைப்புகளை உடனடியாகத் துண்டிக்கவும் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநகராட்சியின் இந்த முடிவு வணிக நிறுவனங்களிடையே விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.